பொன்னேரி, ஆக. 23 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிக் கட்ட பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் அம்முகாமில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான தகுதி உள்ள பயனாளிகள் மற்றும் தகுதி இல்லாதவர்கள் என்பதனை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் விளம்பர பதாகைகள் மூலமாகவும், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் மூலமும், தன்னார்வலர்கள் மூலமும் ஏற்படுத்திட வேண்டும் என அம்முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை பயன்படுத்தி பயனாளிகளை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பயனாளிகளை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
இப் பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் கலந்து கொண்டு விரிவான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்கினார். பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், துணை வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






















