கும்பகோணம், ஆக. 29 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் கார் ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் இன்று காலை திருநாகேஸ்வரம் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டு இருந்த போது திருவாரூர் புறவழிச்சாலையில் திடீரென்று காரில் புகை வந்தது.
உடனே காரை ஓரமாக நிறுத்தி பார்த்தபோது பேட்டரி ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி அதிலிருந்து தீ பொறி எழும்பியதைத் தொடர்ந்து கார் திடீரென்று தகதகவென்று தீப் பற்றி எரிய தொடங்கியது. இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பாராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் கார் உட்புறம் முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. இவ்விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் காரில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.