காஞ்சிபுரம், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி செலவின பார்வையாளராக மதுக்கூர் ஆவேஸ் ஐ.ஆர்.எஸ், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக சந்தோஷ்சரண் ஐ.ஆர்.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து, அங்கு பதிவான புகார் விவரங்கள் மற்றும் அவற்றிக்கான தீர்வுகள் ஆகியவற்றை கேட்டறிந்தார்.
அதன் பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை தேர்தல் செலவின பார்வையாளர்கள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தல் செலவின பார்வையாளராக காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வந்துள்ளதாகவும் வெளிப்படையான நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது எனவும் அப்போது அவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்க வர வேண்டும்எனவும் மேலும் தங்களது ஜனநாயக கடமையை செயலாற்றிட வேண்டும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் போது, தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கவே தேர்தல் ஆணையம் எளிதான வகையில் சி விஜில் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அதில் தெரிவிக்கப் படும் அனைத்து விதி மீறல்கள் புகார்கள் மீதும் உரிய மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் எனவும்உறுதிப்பட தெரிவித்தனர்.
மேலும் தேர்தல் நடத்தை விதி மீறல்களின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அனைத்தையும் உரிய முறையில் ஆவணங்கள் கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும், வேட்பாளர் செலவினம் குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள படி அவைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





















