வலங்கைமான், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
:திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குத்து விளக்கு, பித்தளை குடம், பித்தளைதவளை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
நாடு முழுவதும் எதிர் வரும் 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அதன் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரேக் கட்டமாக நடைபெற உள்ளது.
அதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16 ஆம் தேதியன்று வெளியிட்ட நிலையில் அந்நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் தேர்தல் அதிகாரிகள் பறக்கும் படை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி வழியாக சென்ற டாடா ஏசி வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட குத்துவிளக்கு, பித்தளை குவளை, பித்தளை குடம், சாம்பிராணி விளக்கு, சொம்பு உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பித்தளை பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கைப்பற்றி வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகத்திடம் ஒப்படைத்தனர் பின்பு அப்பொருட்கள் அனைத்தும் அரசு கரூவூலத்தில் வைக்கப்பட்டது.




















