சென்னை, ஜன. 3 –

சட்டத்திற்கு புறம்பாக வரி திருப்புத் தொகையினை வழங்கியதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வணிகவரி உதவி ஆணையர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் (வணிகவரி மற்றும் பதிவு) அரசின் வரி வருவாயினை வசூலிக்கும் போதும், வணிகர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரி திருப்புத் தொகையினை திரும்ப வழங்கும் போதும் அதற்குரிய விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு ஆய்வுக்கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், சென்னையில் உள்ள வணிகவரித்துறையில் துணை ஆணையரின் கட்டுப்பாட்டில் வரும் வரிவிதிப்பு சரகம்-VI-ல் உள்தணிக்கை மேற் கொள்ளப்பட்ட போது, நந்தனம் வரிவிதிப்பு வட்டத்தில் உரிய விதிகளை பின்பற்றாமல், தவறான உள்நோக்கத்துடன், சட்டத்திற்கு புறம்பாக வரி திருப்புத் தொகை தொடர்பான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும்,                          இதன் மூலமாக ரூ.1,46,42,965/- அரசாங்கத்திற்கு வருவாய்                                         இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு காரணமான எ.மதுரைபாண்டியன், உதவி ஆணையர் (வணிகவரி), நந்தனம் வரிவிதிப்பு வட்டம் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக, சம்பந்தப்பட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் எ.மதுரைபாண்டியன்,  என்பவர்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து அரசின் அங்கீகரிக்கப்பட்ட புலனாய்வு அமைப்பு மூலம் உரிய விசாரணை  மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here