சென்னை, செப்.5-
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஒவ்வொர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப் பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர்களை அரசு பெருமைப் படுத்தி வருகிறது.
அதைப் போன்று இந்த ஆண்டு 2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிப் புரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப் படுகிறது.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதன் அடையாளமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான விருதினை வழங்கி அவர்களை பெருமைப் படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா ஐ.பி.எஸ்., பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் ஐ.பி.எஸ்., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.