கும்பகோணம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான சோமகலாம்பிகா சமேத பாணபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரமோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் மகா பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை பிளக்க சிவபெருமான் பாணபுரம் எனும் இத்தலத்தில் இருந்துதான் பாணம் தொடுத்தார். பாணம் தொடுத்த இடமாதலால் இது பாணாதுறை என்ற பெயர் பெற்றது.
இறைவன் பாணபுரீஸ்வரர் இறைவி சோமகலாம்பாள். மாநகரின் ஈசானிய பாகத்தில் அமைந்துள்ளது, வியாச முனிவர் காசியில் பெற்ற சிவபிரதோஷம் நீங்க, இறைவன் கட்டளைப்படி மகாமக திருக்குளத்தில் நீராடிய பின் பாணபுரீஸ்வரரை வழிப்பட்டதாகவும் அதுபோலவே வங்கதேச மன்னன் சூரசேனன் தமது மனைவி காந்திமதி கொடிய குஷ்டநோயினால் அவதியுற்ற போது, அவரும் பாணபுரீஸ்வரரை வணங்கிய பின் அவரது மனைவியின் நோய் நீங்கப்பெற்றதோடு அழகிய ஆண் மகவையும் பெற்றனர் என்பதும் இத்தல வரலாறு
இத்தகைய பெருமைமிகு சைவத்திருத்தலத்தில், ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சோமகலாம்பிகை, பாணபுரீஸ்வரர், திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மாலை மாற்றும் நிகழ்வும் தொடர்ந்து நலுங்கை வைத்தலும் நடைபெற்ற பிறகு, சுவாமிகளுக்கு கங்கனம் கட்டி, பூணூல் அணிவித்து, சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் கூறி, சீர்வரிசை தட்டுக்களுடன், தேங்காய், பூ பழங்கள், பலகாரங்களுடன், திருமாங்கல்யம் வைத்து பூஜித்து பின், நாதஸ்வர மேள தாளம் முழங்க, உதிரி மலர்கள் தூவி, திருமாங்கல்ய தாரணம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






















