pic file copy
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை அருகே பட்டா இடத்தில் சாலை அமைத்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை கிராமத்தில் வாழ்க வளமுடன் என்ற நகர் உள்ளது. இந்த நகர் போடப்படும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை ரோடு போடுவதற்காக ஊராட்சிக்கு எழுதி கொடுத்துள்ளனர்.
ஆனால் சாலைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நகரில் இருந்து மெயின் ரோட்டுக்கு வர முடியாமல் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டு வந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும் என பல காலமாக அவர்கள் அரசுக்கு கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட பாதையை விட்டு விட்டு பட்டா இடத்தில் சாலை போட முயற்சி நடைபெற்றது.
இது சம்மந்தமாக பட்டா இடத்தின் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் பட்டா இடத்தில் எதிர்ப்புகளை மீறி அடிஅண்ணாமலை ஊராட்சி சார்பாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதற்கான செலவு ரூ.13லட்சமாகும். இந்த சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். விவசாயி ரேணு என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
அப்போது அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து அகற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு விடுவித்தனர்.
இந்நிலையில் ஊராட்சிக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்காமல் பட்டா இடத்தில் சாலை அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி விவேகானந்தர் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ஏ.சி.ஆறுமுக யாதவ் தலைமையில் அந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று புதியதாக சாலை அமைக்கப்பட்ட பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிகாரிகளின் இந்த அத்து மீறலை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.