திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பேரூராட்சியில் உள்ள சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ், துணை இயக்குநர் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் அலுவலர் உழவர் சந்தை சி.அரக்குமார், அரசு அலுவலர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாக உரிய விலையில் கிடைக்கும் வகையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் திருவண்ணாமலை, தாமரை நகர், செங்கம், போளுர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது, சேத்பட் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேத்பட் பேரூராட்சி பகுதியில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 76 கிராமங்களை சேர்ந்த 23,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவார்கள். சேத்பட் உழவர் சந்தையில் தினமும் 5-10 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரும் என எதிர் பார்கப்படுகிறது. மேலும், உழவர் சந்தைக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட நுகர்வோர் காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்கு வருகை புரிவார்கள். தற்போது சேத்பட் பஜார் மார்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.
சேத்பட் புதிய உழவர் சந்தை அமைக்கப்படுவதால் குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், இந்த உழவர் உந்தையில் சுற்று வட்டாரத்தில் உள்ள 76 கிராமங்களை சேர்ந்த விவாசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் உற்பத்தி செய்து வரும் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், வெள்ளிரிக்காய், முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகள், நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சேத்பட் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் சேத்பட் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 16.05.2018 அன்று இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனத்தில் 1000 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். மணிலா விளை பொருளை அடிப்படையாக கொண்டு சேத்பட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சேத்பட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மாநில அரசின் நிறுவன தொடக்க வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் பெறப்பட்டு வணிகம் தொடங்கப்பட்டது. மேலும், நீடித்த நிலையான மானாவரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் (பகுதி-2) மதிப்பு கூட்டு மையம் ரூ.11.58 லட்சம் செலவில் 24.10.2019-ல் நிறுவப்பட்டு, இதில் ரூ.10.79 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இந்த மதிப்பு கூட்டு நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் மணிலா நாட்டு மரச்செக்கு எண்ணெய், 50 லிட்டர் நாட்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு நிறுவன பங்குதாரர்களுக்கும், நுகர்வோருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சிறு தாணியங்கள், தாணியங்கள், மாவு அரைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here