ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.79 லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனம் நோயாளிகள் பயன்பாட்டிதற்கு எம்.பி., மற்றும் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான அன்வர் ராஜா வழங்கி துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி எம்.பி. மற்றும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா தனது தொகுதி நிதியிலிருந்து நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் சிரமமின்றி செல்வதற்காக பேட்டரி கார் வழங்க முடிவு செய்தார்.
அதற்காக ரூ.8.79 லட்சம் மதிப்பில் பேட்டரி கார் உருவாக்கப்பட்டு ராமநாதபுரம் தலைமை மருத்துவுமனையில் பேட்டரி கார் வழங்கும் நிகழ்ச்சி நடந்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொது மக்கள் தரமான மருத்துவ வசதியினை பெற்று பயனைடையும் வகையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் சராசரியாக ஆயிரத்து 500 பேர் புறநோயாளிகளாகவும், 800 பேர் உள் நோயாளிகளாகவும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு, டயலாசிஸ், நியூராலஜி, மின்னொலி இதய வரைவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, என்றார்.
விழாவில் பேட்டரி கார் வழங்கி எம்.பி. அன்வர்ராஜா பேசியதாவது:
தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் எம்.பி. என்ற அடிப்படையில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.25.54 கோடி மதிப்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தளம், டி பிளாக் அருகில் அம்மா பூங்கா வளாகத்தில் ரூ.1.31 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள், 544 பள்ளிகளுக்கு ரூ.37.52 லட்சம் மதிப்பில் நுால்கள், 15 மாற்று திறனாளிகளுக்கு ரூ.. 9.28 லட்சம் மதிப்பில் வாகனம் மற்றும் இன்றைய தினம் மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக ரூ.8.79 லட்சம் மதிப்பில் பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எம்.பி. பேசினார்.
விழாவில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் முல்லைக்கொடி, ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், முதன்மை டாக்டர் சாதிக்அலி, ஞானக்குமார், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.