சென்னை, அக். 22 –

இன்று தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப் பெற்றது.

அக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அகலமான பல தடங்கள் கொண்ட சாலைகளும், தரமான ஓடு தளம் கொண்ட சாலைகளும் நவீன தொழில் நுட்பத்தில் அமைப்பதால் வாகன செறிவும் கூடுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாட்டில்தான் விபத்து நேரும் இடங்கள் கரும்புள்ளிகள் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் 748 கரும்புள்ளிகள் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு மூலம் அடையாளம் காணப்படுகின்றன. 500 மீட்டர் நீள இடைவெளியில் கடந்த மூன்றாண்டுகளில் 5 பெரிய சாலை விபத்துகள் அல்லது 10 உயிரிழப்புகள் நிகழ்ந்த இடத்தையே கரும்புள்ளி இடமாக போக்கு வரத்து ஆராய்ச்சி பிரிவு அடையாளம் காண்கிறது.

கரும் புள்ளிகள் என அடையாளம் காணப்பட்டு விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற் கொண்ட பிறகு, மீண்டும் விபத்துகள் நடை பெறாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தினார்கள்.

டெல்லியில் உள்ள மத்தியசாலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் சாலை பாதுகாப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப் பட்டு வருகிறது. அதைப்போல தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுக்கும் டெல்லியிலுள்ள அலுவலர்களை வர வழைத்து பயிற்சி அளிக்கப் படும் என கூறினார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சாலை பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், முக்கிய சந்திப்புகள் மற்றும் வளைவான இடங்களில் எல்லாம் சோலார் விளக்குகளை பொருத்தி விபத்துகள் நடக்காத வகையில் சாலைப் பாதுகாப்புப் பணிகளை மேற் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

சாலைப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அரசு பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், புற வழிச்சாலை, வெளிவட்டச்சாலை போன்றவற்றை பெரும் நிதி செலவில் மேற் கொண்டு வருகிறது. அரசு எத்தகைய நடவடிக்கை மேற் கொண்டாலும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் போதே விபத்துகள் ஏற்படா வண்ணம் வடிமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகவுள்ள இடங்களில் எல்லாம் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர்மட்ட பாலங்கள் போன்றவற்றை எந்தெநெத இடங்களில் அமைக்கப் பட வேண்டும் என்பதைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் அமைச்சர்களும், செயலாளர்களும் ஆய்வு கூட்டத்தை நடத்தி உயிர் இழப்பை தவிர்க்க ஆலோசனை வழங்க வேண்டும். சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். அதுப் போன்று வாகனங்கள் செறிவுக் காரணமாக காற்றில் அதிகப்படியான மாசு ஏற்படுவதை தடுக்க சாலைகளின் இரு ஓரங்களிலும் மரங்கள் நட்டு பாதுக்காக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஈடுப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் ஆர்.கோதண்டராமன், தலைமைப் பொறியாளர்கள் ஆர்.சந்திரசேகர், என்.பாலமுருகன், கீதா, எம்.கே.செல்வன், விஜயா, சாந்தி, கண்காணிப்புப் பொறியாளர்கள் டி.இளங்கோ, டி.தனசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here