தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமலும். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை மறித்து தாக்க முற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் வாக்குப் பதிவு எந்திரங்கள் எடுத்து செல்வதற்கு என பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக ஓய்வு பெற்ற காவல்துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. 3 நாட்கள் தேர்தல் பாதுகாப்பு பணி முடித்தவர்களுக்கு தஞ்சை ஆயுத படை மைதானத்தில் ஊதியம் வழங்கப்பட்டது
பெரும்பாலனவர்கள் ஊதியம் பெற்று சென்ற நிலையில் 75 பேர் 17ஆ ம் தேதி இரவே வந்து விட்டதால், தங்களுக்கு நான்கு நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து திடீரென அவர்கள் அனைவரும் ஆயுதபடை மைதானம் அமைந்துள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு மட்டுமல்லாமல் அச்சாலை வழியாக நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை செல்ல விடாமல் வழி மறித்தனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் மறித்து அவர்களை தாக்க முற்பட்டனர் அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சட்டம் ஒழுங்கு மற்றும் தேசத்தை பாதுகாக்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே இது போன்று பொது இடத்தில் நடந்து கொண்டது, அக்காட்சியினை கண்டவர்கள் மத்தியில் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.