அரியலூர், ஜூலை. 29 –
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த ராகுல்காந்த் எனும் மாணவர், கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவரை, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடைப்பெற்ற பல்வேறு அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வருகைத் தந்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப் பட்டியலில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்த் அவர்களை அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா உடனிருந்தார்.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்தின் தந்தை அப்பகுதியில் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். மேலும் அவரது தாயார் குடும்பத் தலைவியாவர் தொடர்ந்து அவர்கள் வறுமையான சூழ்நிலையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அச்சூழலையும் பொருட்படுத்தாது மாணவர் ராகுல்காந்த் நன்றாக கல்விப்பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 588 மதிப்பெண் பெற்றுள்ளார். குடும்பத்தின் வறுமை நிலைக் காரணமாக அம்மாணவர் மருத்துவப் படிப்பிற்கான விருப்பம் இருப்பினும், அதற்கான ஆயத்த மேற்படிப்பு மேற்கொள்ள முடியாத சூழலில் தனது மருத்துவக் கனவை புறம் தள்ளிவிட்டு, தொடர்ந்து கால்நடை இளநிலை மருத்துவ படிப்பிற்கு பதிவு செய்ததின் மூலமாக கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளார். மேலும் தனது மேற்படிப்பிற்கான உதவிகளை செய்திடும்படி தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் ராகுல்காந்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து தான் வழியுறுத்தி வருவதாகவும், மேலும் நீட் எதிர்ப்பு என்பது, ராகுல்காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகதான் எனவும், மேலும் அவர் போன்றவர்களுக்கு எப்போதும் உதவிட தமிழ்நாடு அரசு இருக்கிறதெனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று, அரியலூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்திற்குடபட்ட பொய்யூர் கிராமத்தில் உள்ள அம்மாணவரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தியும் மேலும் அவரது உயர் கல்விக்கு தேவையான உதவிகளைகளையும் கேட்டறிந்தார். மேலும் அப்போது அம்மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் உயர் கல்விக்கான தேவைகள் அனைத்தையும் செய்து தருவதாக தெரிவித்துள்ளார் என அப்போது அவர்களிடம் தெரிவித்தார். அமைச்சருடன் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் மாணவரின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.





















