தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவினை முன்னிட்டு சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதில் ஆயுர்வேத துறையில் பங்களிப்பு செய்து வரும் புனே சாவித்திரி பூலே பல்கலைக்கழக பேராசிரியர் (ஆயுஸ் ) பூஷன் பட்வர்த்தனுக்கு சாஸ்திரா மகாமனா விருதும், இயற்பியலில் சிறந்து விளங்கும் பெங்களூரு தேசிய உயராய்வு மையத்தின் ஹோமி பாபா ஆய்விருக்கை பேராசிரியர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவாவுக்கு சாஸ்திரா ஜி.என். ராமச்சந்திரன் விருதும், வேதியியல் மற்றும் பொருள் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் மும்பை இந்திய வேதியியல் தொழில்நுட்ப பேராசிரியர் ஜி.டி.யாதவ் மற்றும் ஆஸ்திரேலியா ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழக பேராசிரியர் சுரேஷ் பார்கவா ஆகியோருக்கு சி. என். ராவ் விருதும் வழங்கப்பட்டது,
இவ்விருதுகளை காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வுக்கழக இயக்குநர் ரமேஷா வழங்கினார். மேலும் இவ் விருதுடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் ரொக்க பரிசும் பாராட்டு மடலும் வழங்கப்பட்டன, இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம், திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மையர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.