இஸ்லாமாபாத்:

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இது ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை அறிவுறுத்தின.

இந்த நிலையில் பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஐரோப்பிய கூட்டமைப்பின் துணைத்தலைவரும், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான உயர்மட்ட பிரதிநிதியுமான பெடெரிகா மோகேரினி, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி முகமது குரேஷியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது இருவரும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருவது குறித்து தீவிரமாக விவாதித்தனர். இருநாடுகள் இடையிலான மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி பெடெரிகா மோகேரினி வலியுறுத்தினார்.

மேலும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மட்டும் இன்றி, தங்கள் மண்ணில் இருக்கும் ஒவ்வொரு பயங்கரவாதிகள் மீதும் பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என அவர் கண்டிப்புடன் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதே ஐரோப்பிய கூட்டமைப்பின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here