மதுரை:

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீறிட்டு எழுந்ததை பார்த்தோம்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது இதுவரை சந்தித்திராத பெரிய தாக்குதல். இந்திய தேசம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருந்த இந்த நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரவேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார்.

அதன்படி இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்களை நடத்தி விட்டு வெற்றிகரகமாக திரும்பிவிட்டது. இதை யாரும் அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது.

இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தேசமே ஆர்த்தெழுந்து பதிலடிதரும் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது.

பா.ஜனதாவை பொறுத்தவரை காஷ்மீர் பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் மீட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

தேசிய அளவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச்சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி தனி நபருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார் என்பதை மறந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் ராகுல்காந்தி அர்ச்சித்து வருகிறார். இது தரமான அரசியலுக்கும், தரமற்ற அரசியலுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

இது லோட்டசுக்கும் (தாமரை), லூட்டர்சுக்கும் (கொள்ளையர்கள்) இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் என்றாலே ஸ்கம் (ஊழல்) என்று அர்த்தம். மோடி என்றால் ஸ்கீம் (திட்டம்) என்று அர்த்தம். பிரதமர் மோடிக்கு தேசமே சக்தி. ராகுல்காந்திக்கு குடும்பமே சக்தியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here