மதுரை:
மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம். மிகப்பிரம்மாண்டமான மெகா கூட்டணி என்று கூறினால் அது அ.தி. மு.க., பா.ஜ.க., பா.ம.க. இடம் பெற்றிருக்கும் கூட்டணிதான். தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. பக்கம் எல்லாம் வெட்டு குத்து என்று சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.
தி.மு.க. கூட்டணியில் வன்முறைகளும் இழுபறிகளும் இருக்கின்றது. மதிமு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது.
எங்களைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய தே.மு.தி.க.வை தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் சுமுகமாக இணைப்பு நடந்திருக்கிறது. இது கட்டாய திருமணம் போல இந்த கூட்டணி என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.
தற்கொலைக்கு சமம் என்று தினகரன் கூறுகிறார். உண்மையிலேயே இயல்பான அன்பான நட்புறவுடன் ஏற்பட்டிருக்கின்ற கூட்டணி. இதை பார்த்தவர்கள் அனைவரும் பதட்டப்படுகிறார்கள். அந்தப் பதட்டத்தின் விளைவாக அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.
28-ந் தேதி அனைத்து மண்டல தலைவர்களுடனும் மோடி காணொளிக்காட்சி மூலம் பேசுகிறார். தமிழ் நாட்டில் மட்டும் 600 இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.