மீஞ்சூர், மே. 04 –
மீஞ்சூர் அடுத்துள்ள தேவதானம் ரங்கநாதர் கோவிலின் முன்பு இன்று மதிமுகவினர் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதில் கோரிக்கையாக ஆலயத்தையும் ஆலயச் சொத்துக்களையும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள தேவதானம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் கோவில் உள்ளது. அதை வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ளது போன்றே ரங்கநாதர் சயன கோலத்தில் காட்சி அளிப்பது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். இந்த ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வலியுறுத்தி மதிமுக சார்பில் இன்று ஆலயத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலய வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா ஆலய நிர்வாகி என்ற பெயரில் கோவிலுக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலத்தை வைத்து பகல் கொள்ளை அடிப்பதாக குற்றம் சாட்டினார். விசேஷ நாட்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வெளியூர் மக்களுக்கு பரிவட்டம் கட்டி லட்ச கணக்கில் பணம் ஈட்டுவதாக புகார் எழுந்துள்ளதாக கூறினார்.
பகல் கொள்ளையை விசாரணை நடத்தி தேவதானம் ரங்கநாதர் ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கோவில்கள், ஆன்மீகம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
திருவாடுதுறை ஆதினத்தில் பல்லக்கில் குருமகா சன்னிதானத்தை தூக்கி செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், பல்லக்கையும் யாரும் தூக்க தேவையில்லை, பல்லக்கிலும் யாரும் ஏற தேவையில்லை என்றார். மதவாத பாஜக அரசு கைக்கூலிகளை வைத்துக் கொண்டு நடிகை ஒரு கருத்தை தெரிவிக்கிறார். ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்பது தான் திராவிட இயக்கத்தின் அடிநாதம் என மல்லை சத்யா தெரிவித்தார்.
























