ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூசாரி அழகன் வகையறாவுக்கு பாத்தியமான ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தன் கோயில் கி.பி. 1643ம் ஆண்டு முதல் ஸ்ரீ பூசாரி அழகனால் அமைக்கப்பட்டு 375 ஆண்டுகளாக 12 தலைமுறைகளாக பூஜை செய்து வரப்படுகிறது. அவர்களது வகையறாக்கள் ஸ்ரீ கோவிந்தன் கோயில் திருப்பணிகளை செய்து கடந்தாண்டு ஸ்ரீ கோவிந்தன் கோயில் கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். கோயில் கும்பாபிஷகேத்தின் தொடர்ச்சியாக வருடாபிஷேக விழா மங்கள இசையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், யாகபூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. பின் காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க வருஷாபிஷேக கும்பஜல அபிஷேகம், சலச தீர்த்தம், மகா தீபாராதனை நடந்தது. மாலையில் உற்சவ பெருமாள் வீதி உலா நடந்தது. ஊர் பொது மக்கள் திரளாக பங்கேற்று ஸ்ரீ கோவிந்தன் அருளை பெற்றுச்சென்றனர்.
வருஷாபிஷேகவிழாவிற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தன், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். கோயில் நிர்வாக தலைவர் ராமையா, கோயில் நிர்வாக கணக்காளர் உடையார், நீலமேகம், ராஜகோபால், வேலு, பொருளாளர் மகாலிங்கம், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் முத்துராமன், மாவட்ட பதிவாளர் பாலு, நிர்வாக ஆலோசகர் நவநீத கிருஷ்ணன், துணைத்தலைவர் சேதுகிருஷ்ணன், பூசாரிகள் அழகர்சாமி, கார் முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ பூசாரி அழகன் வகையறாக்கள் மற்றும் கிராம பொது மக்கள் செய்து இருந்தனர்.