தஞ்சாவூர், ஆக. 05 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி மற்றும் தஞ்சாவூர் விதை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
இம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருவதால், விதைப்புக்கு தேவையான அளவு வரப்பெற்ற நெல் விதைகள் அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (04.08.22) தஞ்சாவூர் மற்றும் மாரியம்மன் கோவிக் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை கையிருப்பு, ஆவண சரிபார்ப்பு மற்றும் விவசாயிகளுக்கு அந்நிலையங்கள் சரியான விலையில் விற்பனை செய்கின்றனவா போன்ற பல்வேறு நிலைக்குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட விதை உரிமங்கள், சம்பா பருவ விதைகள் கையிருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் ( பில் ) விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் (ரசீதுகள்) வரவுசீட்டுகள் போன்றவற்றை சரிபார்த்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் வரவு சீட்டுகளை (ரசீது) பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடம் அறிவுறுத்தினர். விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் விற்பனை நிலையங்களுக்கு எச்சரித்தனர்.
இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான விற்பனை சீட்டு (ரசீது) விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். (ரசீது) விற்பனைச்சீட்டு இல்லாமல் விற்றாலோ, மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு அறிவுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கையை விடுத்தனர்.
தொடர்ந்து, சம்பா பருவத்தில் நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான நீண்ட கால வயதுடைய விதைகள் ஆன சி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப் 1, ஏடிடீ 51 போன்றவற்றை விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து விதை ஆய்வு நிலையத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், விதை விற்பனையாளர்கள், நெல் விதைகளின் முளைப்பு திறனை கட்டாயம் உறுதி செய்த பின்னர் மட்டுமே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அந்நிலையங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.



















