ஊத்துக்கோட்டை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து 100க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் நகர் பெரிய காலனியில் கடந்த 1992-இல் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 பேருக்கு அரசு பட்டா வழங்கியதாக தெரிகிறது.
ஆனால் அந்த பட்டாவை அடங்கலில் ஏற்றப் படாததால், வீடு கட்ட, கடன் பெற என எதற்குமே பட்டாவை பயன்படுத்த முடியவில்லை எனவும், நிரந்தர பட்டாவாக மாற்றி தர வட்டாட்சியர் அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை பயனாளிகள் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்து, இன்று திடீரென மாம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஊத்துக்கோட்டையில் இருந்து பெரியபாளையம் செல்லும் 92-B அரசு பேருந்தை சிறைப் பிடித்த கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரியபாளையம் காவல் துறை மற்றும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதன் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.அதனால் அப்பகுதியில் வெகு நேரம் பெரும் பரபரப்பு சூழ்ந்திருந்தது.