பொன்னேரி, மே. 11 –

பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலூகா ஆரணி ஆற்றுப்படுகையில் அரசு அதிகாரிகளின் ஆதரவோடு  தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சவுடு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. மேலும் மணல் எடுத்துச் செல்லும் லாரிக்கான உரிமம் இல்லாமலும், அரசின் விதிமுறைகளை மீறியும் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆரணி ஆற்றின் கரையை சுற்றிலும் பொன்னேரி நகராட்சி மற்றும் பல்வேறு கிராமங்கள் இருக்கும் சூழ்நிலையில் மணல் அதிகளவில் சுரண்டப்படுவதால் ஆற்றின் கரை உடைந்து அப்பகுதி கிராமங்களுக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆரணி ஆற்றில் கரை உடைப்பு ஏற்பட்டு பொன்னேரி நகராட்சி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள  பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது  பலதரப்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பொன்னேரி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார்  100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொன்னேரி  நகரமன்ற அதிமுக துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து திடீரென அதிகமாக தண்ணீர் திறப்பதால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் இருப்பதால் உடனடியாக மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மேலும் குவாரி உரிமத்தை ரத்து செய்திட வேண்டும் என்றும்  மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போதிலும், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குவாரியை நிறுத்ததும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

உடனடியாக தனியார் உரிமை பெற்று நடைபெறும் கோரையை அரசு அதிகாரிகள் நிறுத்துமாறு உத்தரவிட்டதன் பேரில் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. மேலும் தனியாருக்கு சொந்தமான இடம் என்றாலும் பொது மக்கள் நலன் சார்ந்த விஷயத்தில் அரசு செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சாலை மறியல் போராட்டத்தால் பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here