கும்பகோணம், மே. 11 –
கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் கும்பகோணம் பெரிய கடை வீதியில் மொத்த பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு குடோன்கள் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அவ்விடம் சென்று ஆய்வு மேற் கொண்டதில் சுமார் 8 டன் மதிப்புடைய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இது குறித்து நகர் நல அலுவலர் பிரேமா கூறுகையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சசிகுமார் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தையன் ஆகியோர் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ள 2 குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக 2 குடோன்களின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூட்டைகளை பிரித்து பார்த்த போது இங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டது.
அக் குடோன்களில் இருந்த 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். மேலும் அதன் உரிமையாளருக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவித உரிமமும் இல்லாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சிமெண்ட் பேக்டரிக்கு எரிபொருளாக அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.























