மதுரை:
மதுரை மாநகர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஆனால் இப்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் பொய்யை மக்களிடம் விதைத்து வருகிறார். இதனை மக்கள் நகைப்பாக பார்க்கிறார்கள்.
அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. அணியில் சேர்ந்துள்ளன. இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இந்த தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. கதை முடிந்துவிடும். அதனை அ.தி.மு.க. தொண்டர்கள் முடித்து வைத்தார்கள் என்ற பெருமை நமக்கு உருவாகும் வகையில் நாம் உழைக்க வேண்டும்.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவை வருகிற 24-ந்தேதி சிறப்பாக அனைத்து வார்டுகளிலும் ஒலிபெருக்கி அமைத்து சாதனை பாடல்களை ஒலிபரப்பி கொண்டாட வேண்டும். கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
வருகிற 27-ந்தேதி பழங்காநத்தத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 50 ஆயிரம் பேர் திரண்டு தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அணி செயலாளர்கள் இந்திராணி, தமிழ்செல்வன், ராஜீவ்காந்தி, அரவிந்தன், மாணிக்கம்.
பகுதி செயலாளர்கள் பிரிட்டோ, அண்ணா நகர் முருகன், ஜெயவேல், மாரியப்பன், வட்ட செயலாளர்கள் கே.வி.கே. கண்ணன், பஜார் துரைப்பாண்டி, தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன், தாஸ், முத்துவேல், ரவி, நல்லுச்சாமி, கணேசன், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.