சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. அ.தி. மு.க. அமைத்துள்ளது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ளது மங்கிப்போன கூட்டணி. தி.மு.க. கூட்டணி உதிர்ந்து போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி.

விருதுநகர் மாவட்டத்தை பல்வேறு துறைகளில் முதல் மாவட்டமாக உருவாக்கி உள்ளோம். தற்போது நாட்டில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். 40 வீரர்கள் இறந்ததற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

வீரத்தில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை நமது இந்திய ராணுவம் அழித்திருக்கின்றது. தேசிய பற்றுடைய மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வர வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள். இந்திய இறையாண்மைக்கு உழைக்கின்ற பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணியை ஆதரியுங்கள். இன்றைக்கு மோடியை கண்டு சர்வதேச நாடுகள் பயப்படுகின்றன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலறுகின்றார். மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது. இந்த விஷயத்தில் அண்ணா தி.மு.க. தொண்டன் மட்டுமல்ல நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மோடியின் கரத்தை உயர்த்தி பிடிக்க தயாராக இருக்கின்றனர்.

அமிர்தசரசில் இருந்து லாகூர் சில கிலோ மீட்டர் தான். ஒரு குண்டு போட்டால் உங்களது ஊரே காலியாகி விடும். நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து இருக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இருக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அண்ணா தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள். எம்.பி. தேர்தல், இடைத்தேர்தல்களில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் நலன் ஒன்றே தாரக மந்திரம் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here