செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்

ராமநாதபுரம், ஆக. 22 –

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூபாய் 1.66 கோடி மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து 125 பயனாளிகளுக்கு ரூபாய் 38.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா விழாவிற்குத் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி  தலைவர் திசை வீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பிற மாநிலங்களின் முதல்வர்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் நான்காயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் போக்குவரத்துத் துறை மற்றும் மின்சார துறை ஆகிய இரண்டு துறைகளும் மிகவும் சவாலாக உள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்து விளங்கும் இந்த இரண்டு துறைகளின் பங்கு மிக முக்கியமானதாகும். தமிழக முதலமைச்சர் சீரிய வழிகாட்டுதலின்படி இந்த இரண்டு துறைகளிலும் உள்ள பல்வேறு குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நரிப்பையூர் மற்றும் குதிரை மொழி குடிநீர் திட்டங்களுக்கு செயல் வடிவம் வழங்குவதற்கு பூர்வாங்க பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக நரிப்பையூர் குடிநீர் திட்டப் பணிகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் திணைகுளம் கிராமத்தில் ரூபாய் 25.26 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்ட சமுதாய நலக் கூடம் கட்டிடத்தை திறந்து வைத்தார். பின் பரமக்குடி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 3 புதிய வழித்தடங்கள், 3 நிறுத்தப்பட்ட வழித்தடங்கள், ஏழு வழித்தட நீட்டிப்பு ஒரு வழித்தடம் மாற்றம் என 14 வழித் தடங்களில் அரசு பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சரக துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஷேக் முகமது, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சிவசங்கரன் உட்பட அரசு அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here