சென்னை, மே.1 –
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. அதனை தூய்மைப்பணியாளர்கள் தினந்தோறும் சேகரித்து அதனை மக்கும் மற்றம் மக்காத குப்பைகளென தரம் பிரித்து தருவதின் மூலம் அக் குப்பைகள் உரமாகவும், எரிவாயுவாகவும் மறு சுழற்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் உலர்கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் வகையில் ரெனால்ட் நிசான் டெக்னாஜிஸ் பி லிமிடெட் மற்றும் எக்கோ லைஃப் கிரீன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் நடமாடும் எரியூட்டும் ஆலை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் எரியூட்டும் ஆலையின் செயல்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு கடந்த ஏப் 28 ஆம் தேதியன்று மெரினா கடற்கரையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் எரியூட்டும் ஆலை நாளொன்றுக்கு சுமார் 5 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகளை எரியூட்டும் திறன் கொண்டதாகும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருமளவு திடக்கழிவுகள் சேரும் இடங்கள் குறிப்பாக நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடைப்பெற்ற இடங்களில் இந்த நடமாடும் எரியூட்டும் ஆலையினை நிறுவி அங்குள்ள பிளாஸ்டிக் மற்றும் உலர்க்கழிவுகள் எரியூட்டப்பட இருக்கிறது.