திருவாரூர், ஜன. 06 –
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் இன்று மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு தியாகராஜர் ராஜநாராயண மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதனைத்தொடர்ந்து பதஞ்சலி முனிவர்களுக்கு வலது பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியான முறையில் கோவிலுக்கு வெளியில் வெகு நேரம் வரிசையில் நின்றிருந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மாவட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தேரோடும் வீதிகளில் நடைபெற்ற உற்சவர் நடராஜர் சிவகாமி அம்மாள் ஆகியோரின் ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், ஆண்டுதோறும் வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் இந்த பாத தரிசன விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர் என்பது இந்நிகழ்வின் முக்கிய சிறப்பாகும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.























