மாலே:
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்.
58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலிஹ் வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் பதவி ஏற்றார்.
இதற்கிடையில், தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுகளுக்கு சுமார் 15 லட்சம் டாலர்கள் அளவுக்கு முறைகேடாக நிதி திரட்டியதாக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்துல்லா யாமீனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள சுமார் 65 லட்சம் டாலர்கள் மதிப்பிலான பணத்தை போலீசார் முடக்கினர்.
இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபருக்கு எதிராக கடந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.