இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசனுடன் நடிக்க காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரை ஷங்கர் அணுகியதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை யாருமே அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தற்போது கமலுக்கு வில்லனாக நடிக்க அஜய் தேவ்கன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனக்குப் பரிச்சயம் இல்லாத மொழிகளில் நடிப்பதில்லை என்பதால் மட்டுமே முடியாது என அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். `இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதியாக நடித்த கமல் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார்.
சேனாதிபதியைப் பிடிக்க முயலும் போலீஸ் கேரக்டர் வேடத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் அதே வேடத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். நெடுமுடி வேணுவின் உதவியாளராக இருக்கும் போலீஸ் கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.