திருமலா:
இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.
அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் நேற்று மாலை திருமலை வந்தடைந்தார்.
அவருக்கு ஆந்திர மாநில மந்திரி அமர்நாத் ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றிரவு இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கும் ரணில் விக்ரமசிங்கே தம்பதியர் இன்று அதிகாலை வெங்கடாஜலபதியை வழிபாடு செய்தனர்.
துலாபாரம் சேவையில் எடைக்குஎடை காணிக்கை செலுத்தி ரணில் விக்ரமசிங்கே நேர்த்திக்கடன் செய்தார். அவருக்கு பட்டு பரிவட்டம், பிரசாதம், தீர்த்தம் ஆகியவற்றை கோவில் நிர்வாகிகள் அளித்தனர்.
பின்னர், திருமலையில் இருந்து கார் மூலம் ரேணிகுண்டா சென்ற ரணில் விக்ரமசிங்கே தம்பதியர் விமானம் மூலம் சென்னை வழியாக கொழும்பு சென்றடைந்தனர்.