மீஞ்சூர், மே. 24 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமன் நாராயண பிருந்தாவனம். இங்கு அமைந்துள்ள சீனிவாச பெருமாளுக்கு 1006 ஆம் ஆண்டு மகோத்சவம் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ வரத எத்திராஜா ஜீயர் சாரிடிரெபிள் டிரஸ்ட் சார்பில் வடக்காஞ்சி என அழைக்கப்படும் புங்கம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவான் ராமானுஜரின் மகோத்சவம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பிற்பகல் 12 மணிக்கு 108 கலச மகா திருமஞ்சனமும், பகல் 1மணிக்கு வைர கிரீடம் சமர்ப்பணம் நடைபெற்றது, இந்த வைர கிரீடத்தை சுதர்சன ஆச்சாரியார் ராமானுஜருக்கு சாத்தினார்.
முன்னதாக வைர கிரீடத்தை கண்ணாடி பேழையில் வைத்து சீர்வரிசை பொருட்களுடன் பஜனை செய்தவாறு பக்தர்கள் கொண்டு வந்து பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வைர கிரீடத்தை சாத்தினர்.
பின்னர் மாலை 3 மணிக்கு எம்பெருமான் வைபவம், இரவு 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இதனை அடுத்து தில்லைகுத்தான் நாட்டிய பள்ளி மாணவர்களின் நாட்டிய அஞ்சலி கலை நிகழ்ச்சி, இரவு மண்டபம் சேருதல், 9 மணிக்கு மங்களகிரி சாத்துமுறை, சகல வாத்தியங்களின் வானவேடிக்கை திருவீதி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பஜனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது
நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர்.
























