கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதன் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. இதில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ம.க ஸ்டாலின், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறார் இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேட்பாளர் ம. க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் கடந்த 50 வருட திராவிட ஆட்சியால் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு நமது பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களுக்கு இன்னும் சேர்ந்த பாடில்லை. தமிழக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழகத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கவும் ஆட்சி கட்டிலில் பாஜக அமர்வது அவசியம் எனவே பாஜகவின் கூட்டணி கட்சியின் கரத்தை வலுசேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை, மாவட்ட துணைத் தலைவர்கள் வேதா, பாலகுரு, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




















