திண்டுக்கல், ஏப். 24 –
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அஞ்சல், வி.புதுக்கோட்டை கிராமம், சிக்குபள்ளம் புதூரில் வசித்து வரும் செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் கே.எஸ்.ஈஸ்வரன் என்பவர் நெல், கடலை, மற்றும் மிளகாய் பயிரிடும் விவசாயி ஆவர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் தாலூக, குள்ளபுரம் கிராமம், ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன், அவரது மனைவி வேலுத்தாய் ஆகியோர் வாரிசுகளுக்கு சொந்தமான 8 சர்வே எண்களில் உள்ள சுமார் 16.74 ஏக்கர் நிலத்தை வாங்கிவுள்ளார்.
அதில் உள்ள 2 சர்வே எண்களுக்கான பட்டா மட்டும் இவர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் மீதமுள்ள ஆறு சர்வே நம்பருக்கு தனது பெயரில் மாற்றம் செய்ய கடந்த மார்ச் 23, 2022 மற்றும் ஏப்ரல் 11 -2022 ல் இ.சேவை மூலமாக பதிவு செய்த நிலையில், அது தொடர்பாக குள்ளப்புரம் கிராம நிருவாக அலுவலர் விஜயன் என்பவரை கடந்த ஏப்.19 ஆம் தேதி சந்தித்து பட்டா மாறுதல் குறித்து அவரிடம் பேசிவுள்ளார்.
அதற்கு கிராம நிருவாக அலுவலர் விஜயன் தனக்கு ரூ1.லட்சம் லஞ்சம் தரும்படியும் அதற்கு முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் தரும்படிக் கேட்டுவுள்ளார். அதனை கொடுக்க விரும்பாத காரணத்தால், தேனி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுக் குறித்து கே.எஸ்.ஈஸ்வரன் புகார் தெரிவித்து கிராம நிருவாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச தடுப்புத்துறை போலீசார் கடந்த ஏப். 20-2022 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து பொறிவைக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். அதன்படி கிராம நிருவாக அலுவலர் விஜயன், கே.எஸ் ஈஸ்வரனிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாகப் பெற்று அப்பணத்தை இளமுருகன் என்ற தனிநபரிடம் பாதுகாப்பாக வைத்திருக்க கொடுத்துள்ளார். அப்போது பொறிவைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் இருவரையும் கைது செய்தனர்.



















