காஞ்சிபுரம், செப் . 20 –
மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வீட்டு முன்பு திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று முதல் எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது
கடந்த மாதம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன
அதன்படி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாணவர் அணி செயலாளருமான சிவிஎம்பி எழிலரசன் தலைமையில் ரயில்வே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட திமுகவினர் மக்கள் விரோத பாஜக ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்
இதில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் சமையல் எரிவாயு கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோசங்களை எழுப்பியவாறு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.