டெல்லி, ஜன. 16 –

74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் நேற்று கொண்டாடியது. கடைசி பிரிட்டிஷ் தலைமை கமாண்டர் சர் எப்ஆர்ஆர் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஜெனரல் கே.எம். கரியப்பா (பீல்டு மார்ஷல்)  ஏற்றுக்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை கமாண்டரானதை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 15ம் தேதி, ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் 2022ம் ஆண்டின் கருப்பொருள்    “எதிர்காலத்துடனான பயணம்”.  இது நவீன போர் முறையில் புதிய தொழில்நுட்பங்களின்  பங்கு  அதிகரிப்பதை அங்கீகரிப்பதாகும்.

ராணுவ தின கொண்டாட்டங்கள், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதுடன் தொடங்கியது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே  , ராணுவத்தினருக்கு விடுத்துள்ள செய்தியில், கடமையின் போது உயிர்நீத்த வீரர்களின் உன்னத தியாகத்தை வணங்குவதாக கூறியுள்ளார். மேலும், போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது தளராத ஆதரவையும் வலியுறுத்தினார். எந்தவித சூழ்நிலையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். தில்லி கன்டோன்மென்ட் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடந்த ராணுவ தின அணிவகுப்பு மரியாதையையும் ராணுவ தளபதி ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு 15 சேனா பதக்கங்களையும் அவர் வழங்கினார்.  இந்தாண்டு ராணுவ தின அணிவகுப்பு, இந்திய ராணுவத்திடம் உள்ள பல்வேறு ஆயுதங்களை காட்சிப்படுத்தியது.  புதிய மற்றும் நவீன  ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விருது பெற்ற வீரர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.  ராணுவத்தினருக்கான புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here