புதுச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுப் பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு வவுச்சர் அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த பணி நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றதை தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் தங்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மாதம் ரூ.10,500 ஊதியத்துடன் மீண்டும் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்தும் மீண்டும் பணி வழங்காததை கண்டித்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொதுப்பணித் துறை ஊழியர்கள் போராட்ட குழு சார்பில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை 3-நாட்கள் சுதேசி பஞ்சாலை அருகே கவன ஈர்ப்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அரசு அறிவித்தபடி மீண்டும் வேலை வழங்கக்கோரி மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் வேலை வழங்கவில்லை என்றால் 2-ஆயிரம் குடும்பத்தை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.





















