குடவாசல், ஜூலை. 09 –

குடவாசல் அருகே உள்ள நெடுஞ்சேரி ஊராட்சி மன்றத்தில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலர்களால் நடைப்பெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தற்காலிக தேர்தல் குறித்த அறிவிப்பு அட்டவணையை கடந்த ஜூன் 20 – 2022 ஆம் தேதியன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் தேர்தல் நடைப்பெறுவதற்கான நாள் ஜூலை 9 – 2022 ஆம் தேதியன்று என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் 27 தொடங்கியது தொடர்ந்து மறு நாளான ஜூன் 28 ல் வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பின்பு வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூன் 30 தேதி என்றும், மேலும் அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூலை 12 – 2022 அன்று நடைப்பெறும். தொடர்ந்து உள்ளாட்சித் தற்காலிக தேர்தல் முடிவுகள் வரும் ஜூலை 14 – 2022 வர இருக்கிறது.

அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள நெடுஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மறைவிற்கு பின்பு தற்போது காலியாக உள்ள இடத்தினை நிரப்புவதற்கான ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தற்காலிக தேர்தல் இன்று நடைப் பெற்று வருகிறது. இப்பதவிக்கு  திமுக ஆதரவுடன் சிவசங்கரும்,  அதிமுக ஆதரவுடன் விஸ்வநாதனும் மேலும் சுயேட்சை வேட்பாளராக தீபன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அப்பகுதி வாக்காளர்கள் நெடுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மற்றும் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். முன்பாக வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை, முகக்கவசம் வழங்கி கொரோனா விதிகள் பின்பற்றப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here