பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்….
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அத்திருத்தல வரலாறு கூறுகிறது.
மேலும் அக்கோவிலில் 18- ஆம் ஆண்டு மாசி மாத தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 22.தேதி வியாழக்கிழமை மாலை சுந்தர விநாயகர், முருகன் வள்ளி, தெய்வான, உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்கள் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அன்று மாலை திருவீதி உலா நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் தொடர்ந்து 23.ம் தேதி அன்று சுக்கிர வள்ளி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனையடுத்து நேற்று 24.ம் தேதி ஆலய வளாகத்தில் சிவ பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்கண்டலம் கிராமத்திற்கு உட்பட்ட மடவிளாகம் கிராமத்திலிருந்து பொதுமக்கள் தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்களை மேல தாளங்கள் முழங்க ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து சோமசுந்தரம் அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் கோவில் வளாகத்தில் எதிரே உள்ள திருக்குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெப்பத்தில் வைத்து சுவாமிகள் உலா வந்தன. இந்தத் திருவிழாவை காண திருக்கண்டலம் சுற்று உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கலந்துகொண்டு 3000 பேருக்கு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவருடன் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்திய வேலு, மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் தக்கார் மற்றும் திருக்கண்டலம் கிராம பொதுமக்கள் இணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.