அரசவனங்காடு, ஜன. 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டத்திற் குட்பட்ட அரசவனங்காடு கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப் பட்டு வரும் மந்தைக்கூறும் விழா இவ்வாண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று அக்கிராமத்தில் வெகு விமர்சியாக அவ்வூர் மக்களால் கொண்டாடப்பட்டது.

அந்நிகழ்வினை முன்னிட்டு அக்கிராமத்தில் உள்ள அனைத்து வகையிலான பசு மற்றும் காளை மாடுகளையும், அதுப்போன்று அதன் கன்றுகளையும் அதி காலையிலையே நீராட்டி அதன் கொம்புகளுக்கு வர்ணங்கள் தீட்டப்பட்டு அதன் கழுத்தில் வேப்பிலை கட்டி அம்மாடுகளை வளர்க்கும் அக்கிராம மக்கள் அதனை அன்போடும் பெருமையோடும் அவ்வூர் வீதி வழியாக அழைத்து வந்தனர். பின்னர் அதனைத் தொடர்ந்து, அவைகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து மந்தை கூறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலும் அவ்விழாவில் பங்கேற்க ஒவ்வொரு ஆண்டும் அக்கிராமத்தில் மாடு வளர்ப்போரின் வீட்டிலிருந்து முதல் மாடாக சுழற்சி முறையில் அழைத்து வருவது வழக்கமாக உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அம்முறைப்படி நடப்பாண்டு விழாவில் பங்கேற்க நாகராஜன் அவர்கள் வீட்டு பசுமாடு கன்றினை அழைத்து வர அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பசு மற்றும் காளை அதன் கன்றுகளை வெகு உற்சாகத்துடன் அவ்வூர் மக்கள் அழைத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவ்வூரின் நடுப்பகுதியான மந்தக் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு, கலந்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நீரில், வேப்பிலை கொண்டு நனைத்து அதனை மூன்று முறை சுற்றி வந்த படியே அங்கு குழுமியிருக்கும் மாட்டின் மீது பொங்கலோ பொங்கல்… பொங்கலோ பொங்கல் … மாட்டு பொங்கல் என கூறிக்கொண்டு அந் நீரினை தெளித்தார்கள். ஆண்டு தோறும் பாரம்பரியமாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று நடைப்பெறும் மந்தைக்கூறும் விழா இவ்வாண்டும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசனங்காடு வடக்கு தெரு தெற்கு தெரு தோப்பு தெரு நடுத்தெரு மாரியம்மன் கோவில் தெரு பெரிய குளத்து தெரு ஆகிய பகுதிகளில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட மாடு மற்றும் கன்றுகள் அழைத்து வந்து மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஊரின் நடுவே உள்ள கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் மதிலழகி காளியம்மன் ஆலயம் சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

மேலும் அனைவரும் வீடுகளுக்கு சென்று தங்களின் வளர்ப்பு மாடுகளுக்கு ஆரத்தி எடுத்தவுடன், கிராமக் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி பின்னர்  மாட்டுக்கு சொந்தக்காரர்கள் அவரவர் வீட்டில் உள்ள மூத்தவர்களின் காலில் காலில் விழுந்து வணங்கி அவர்களின் வாழ்த்துகளை பெற்று வீடு திரும்பினர்.  வெகு உற்சாகத்துடன் நடைப்பெற்ற அவ்விழாவினால் அவ்வூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here