தனியார் மருத்துவ மனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை, ஜூலை 28-
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை காவேரி தனியார் மருத்துவ மனையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு, மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் நடத்தும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினைத் தொடங்கிவைத்தார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் சந்திரகுமார் இந்தியதொழிற் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து 2 கோடியே 20 இலட்சத்திற்கான காசோலையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் டாக்கடர் கே.டி சீனிவாச ராஜா ரூ. 7 இலட்சத்திற்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.
தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர் அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு விழிப்புணர்வு பணிகளும் அரசின் சார்பில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களின் மூலம் சுமார் 2,15,17,446 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் கூறப்படுகிறது.
இந் நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் என்.எழிலன் மற்றும் த.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மரு.ஜெ.இரதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முதன்மைச்செயலாளர் ககன்தீப் பேடி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு உமா, பெரு நகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ( சுகாதாரம் ) மரு எஸ். செல்வ வினாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.