திருவண்ணாமலை ஆக 4-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் அலுவலக ஊழியர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியேற்றுக் கொண்டனர். அப்போது முகக்கவசம் அணிதல் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல், கைகளை முறையாக கழுவுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை பின்பற்றுவது என உறுதியேற்கப் பட்டது. அதனைத் தொடர்ந்த கைகளை சோப்பு போட்டு முறையாக எப்படி கைகழுவுவது என சுகாதார துறையினர் செயல் விளக்கம் செய்து காட்டினர். ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்ட அனைத்து ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய கைகளை கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல வெம்பாக்கம் வட்டத்தில் தாசில்தார் குமாரவேல் தலைமையிலும் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் பி.நடராஜன் தலைமையிலும் செய்யாறு பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் பி.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமையிலும் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையிலும் செங்கம் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்திலும் வேட்டவலம் அடுத்த ஆவூர் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமை ஆசிரியர் கீதா தலைமையிலும் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் எஸ்வி நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையிலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.