தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில் 38 தமிழ் அடை மொழிச் சொற்களை மெகந்தியால் தீட்டி தமிழுக்கு பெருமைச் சேர்த்தனர்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உலக தாய் மொழி வாரம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, மாணவிகளுக்கு இடையே மெகந்தி போடும் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் அதில் பங்கேற்ற மாணவிகள் தங்கள் கைகளில் அருந்தமிழ், அழகு தமிழ், இன்பத்தமிழ், கன்னித் தமிழ், சங்கத்தமிழ், சுவைத் தமிழ், செழுந்தமிழ். தாய்த் தமிழ், தீந்தமிழ், பழந்தமிழ், முத்தமிழ் என 38 தமிழ் அடைமொழி சொற்களுடன், பாரதியார், திருவள்ளுவர், தமிழக அரசு சின்னம், ஏர் உழவன். காளை உள்ளிட்ட பல வடிவத்திலான படங்களையும் மாணவிகள் தங்கள் கையில் மருதாணியால் ஓவியமாக தீட்டி, அதன் கீழ் தமிழ் சொற்களை பதிவிட்டு அசத்தினார்கள்.
தமிழின் பெருமையை பறை சாற்றும் வகையில் நடத்தப்பட்ட அப்போட்டியில் அனைத்து மாணவிகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு தொகையுடன். கூடிய புத்தாடைகளையும் வழங்கி மாணவிகளை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி நிர்வாகம்.























