திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் எஸ்.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் காவல்துறை ஆய்வாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.காண்டீபன் நகர செயலாளர் வி.செந்தில், நகர பொதுச் செயலாளர் கே.மஞ்சுநாதன், இந்து வியாபாரிகள் சங்க எஸ்.செல்வம் ஒன்றிய செயலாளர் என்.ராஜ்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தாசில்தார் சுரேஷ் பேசும்போது
தற்போதுள்ள கொரோனா நோய் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள் திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது.
பொது இடங்களில் உரியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்ததி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது விழாக்கொண்டாடுவதற்கு அனுமதியில்லை. சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும் நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதியில்லாத நிலையில சமய விழாக்களை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடவேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவையட்டி தனிநபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனிநபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படும். தனிநபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இச்சிலைகளை முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினை கடைபிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.
விழாவுக்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு அவ்விடங்களில் பொருட்கள் வாங்க விற்கும் போதும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
மேலும் விநாயகர் சதுர்த்தி விழா அரசு வழிகாட்டுதல்படி நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். அப்போது இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மட்டும் தடை விதிக்கும் அரசு ஏன் டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கியுள்ளது என பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய தாசில்தார் விநாயகர் சதுர்த்தி விழா அன்று பொதுமக்களுக்கு எந்த பிரச்சனை இல்லாமல் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். முடிவில் மண்டல துணை தாசில்தார் மு.சாந்தி நன்றி கூறினார்.