திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை, மார்ச். 22 –
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நடமாடும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கிறது. அந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ள சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை மாணவர்கள் பார்த்து பயன் பெற்று வருகின்றனர்.
அதன்படி திருவண்ணாமலைக்கு சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் வரலாற்று புகைப்பட கண்காட்சி வாகனம் வந்தது. அதனை தேரடி வீதியில் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தாசில்தார் எஸ்.சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.வி.எம்.நேரு, நகரமன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், நகரமன்ற உறுப்பினர் க.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சி வாகனத்தில் இடம்பெற்றிருந்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்களை ஏராளமான பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து இந்த வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய உள்ளது. அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அதனை பார்வையிட திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.சதீஷ் ஏற்பாடு செய்துள்ளார்.