திருவண்ணாமலை ஜூலை.21- விளை நிலங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் தானிப்பாடியில் கோட்டாங்கல் ஓடை பகுதி உள்ளது. இந்த பொது வழியை தானிப்பாடியைச் சேர்ந்த ஜி.ரமேஷ், ஜெயக்கொடி, தனஞ்செழியன், சுரேஷ், ஜெகதீஷ், சென்ராயன், ஏழமலை, குமார், சங்கர் உள்பட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு செல்ல பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கோட்டாங்கல் ஓடை பாதையை அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சின்னப்பையன், அய்யனாரப்பன் மகன்கள் பன்னீர், ராஜீவ்காந்தி, முருகன், ராஜேஷ் ஆகியோர் ஆக்கிரமித்து உள்ளாராம். இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு சென்று பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச  முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இது மட்டுமன்றி அறுவடைக்கும், புதிய பயிர் வைக்கவும் உழவு மாடுகள், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத அளவு ஆக்கிரமிப்பாளர்கள் தடையை ஏற்படுத்தி உள்ளார்களாம்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.ஜாகீர்ஷா தலைமையில், விவசாய சங்க பிரதிநிதிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்சை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயிகள் தங்களது நிலத்திற்கு செல்ல வழிவகை செய்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here