சென்னை, ஜூன். 07 –
தமிழ்நாடு பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசுக் பள்ளிக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசுக் கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதலமைச்சர் இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக் கட்டடம், மாணவ மாணவியர் தங்கும் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் ஆகிய கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடத்தை வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான பல்வேறு திட்டங்களின் பயன்கள் பலதரப்பட்ட மக்களையும், மாணவர்களையும் சென்றடையும் வகையில் பொதுப்பணித் துறை தரமான பல கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது. அக்கட்டடங்களின் வரைபடம், பயன்பெறும் துறைகளை கலந்தாலோசித்து தற்போதைய தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்து நவீன முகப்பு தோற்றத்துடன் பொதுவான கட்டமைப்பு (Type Design) பொதுப்பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசுக் பள்ளிக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசுக் கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடத்தை முதலமைச்சர் வெளியிட்டார்.
இந்நிகழ்வின் போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா,இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.





















