பொன்னேரி, மே. 09 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம்பள்ளம் பகுதியில் ஜவஹர் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரியவருகிறது. இந் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாகவும், நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜவஹர் தலைமறைவான நிலையில் அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வேம்பாக்கம்பள்ளம் பகுதியில் ஜவஹரை கத்தியால் குத்தியும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜவஹரின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இக்கொலைக் குறித்து பொன்னேரி கவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மற்றும் தேடும் பணியில் பொன்னேரி போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.























