மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியான அரியன்வாயலில் அமைந்துள்ளது ஜெகன் நகர், மற்றும் எவரடி நகர், மேலும் அப்பகுதியில் சுமார் 500 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய இயக்கங்கள் சார்பில், அப்பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனுவளித்தனர்.
அதில் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் எவரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா என அமைத்து, அதனை தற்போது, குப்பை கிடங்காக மாற்ற முயலுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பணிகளை உடனே கைவிடுமாறும், தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வள மீட்பு பூங்காவை குப்பைக்கிடங்காக மாற்ற முற்பட்டால் அதனை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைத்திட வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, குப்பைக்கிடங்காக மாற்றும் பணிக்கு அப்பகுதி வாழ் மக்களின் எதிர்ப்பு தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இம்மனு கொடுக்கும் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் யூசுப், பொருளாளர் சாயின்ஷா, நகர துணை செயலாளர் நாகூர் கனி, ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழக மீஞ்சூர் கிளை பொறுப்பாளரும்.மாநில மாணவரணி செயலாளர் அப்துல் காதர், மாநில தொண்டர் அணி செயலாளர் ரிஸ்வான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






















