எட்டயபுரம்:
மதுரையில் இருந்து மூலிகை செடிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த மோகன்(வயது 52) என்பவர் ஓட்டினார். லாரி எட்டயபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி விலக்கு பகுதியில் பாலத்தில் சென்றபோது பின்னால் மதுரையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் தூத்துக்குடி நோக்கி வந்தது.
வேனை மதுரை கன்னியம்பட்டியை சேர்ந்த பிரகாசம்(31) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் வேன் பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.
டிரைவர் மோகன் லாரிக்கு அடியில் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து வேன் டிரைவர் பிரகாசத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.